தோல், மயிர் மட்காமல் 56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டி.

தோல், மயிர் மட்காமல் 56 ஆயிரம் ஆண்டுகள் புதைந்து கிடந்த ஓநாய் குட்டி.
71 / Post Views.

கனடாவின் வடக்குப் பகுதியில் மம்மி என்று கூறப்படும் வகையில் பதனப்பட்டு புதைந்து கிடந்த ஓநாய்க் குட்டி 56 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்ததாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிரந்தரப் பனிப் பாறைகளில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு புதைந்து கிடந்த இந்த பெண் ஓநாய்க் குட்டியின் மம்மி போல பதனமாகியிருந்த உடலை தங்கம் தேடும் ஒருவர் கண்டுபிடித்தார்.

யூகான் மாகாணத்தில் டாசன் மாநகருக்கு அருகே 2016ம் ஆண்டு இந்த குட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு அந்தக் குட்டிக்கு ஜூர் என்று பெயரிடப்பட்டது. ஜூர் (Zhur) என்றால் அப்பகுதியின் உள்ளூர் மக்கள் மொழியில் ஓநாய் என்று பொருள்.

இதுவரை அறியப்பட்ட ஓநாய் மம்மிகளிலேயே மிகவும் முழுமையாக கிடைத்துள்ளது இதுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். காரணம், அதன் தோல் முடி, பல் ஆகியவை சிதையாமல் அப்படியே உள்ளன.

பலவித தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அந்த விலங்கின் வயது, உணவு, எதனால் இறந்திருக்கக் கூடும் என்பது உள்ளிட்ட அதன் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை ஓர் ஆய்வுக் குழு கண்டுபிடித்தது.

ஓநாய்க் குட்டியின் உடல்

Current Biology journal என்ற சஞ்சிகையில் இந்த கண்டுபிடிப்பு வெளியானது. அந்தக் குட்டியும் அதன் தாயும் சாலமோன் மீன் போன்ற நீர்வாழ் வளங்களை உண்டு வாழ்ந்திருக்கலாம் என்று அந்த ஆய்வு காட்டுகிறது.

அந்த ஓநாயின் உடலில் இருந்த டி.என்.ஏ. தரவுகளையும், அதன் பல் எனாமல் பகுப்பாய்வையும் ஒப்பிட்டு 56 ஆயிரம் முதல் 57 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது வாழ்ந்து இறந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த உடலை எக்ஸ் ரே செய்து பார்த்ததில், இறக்கும்போது அதன் வயது, 6 முதல் 8 வாரங்கள் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

ஓநாய்க் குட்டி உடலின் எக்ஸ் ரே படம்.

யூகோன் அல்லது அருகில் உள்ள அலாஸ்காவில் ஓநாய் புதைபடிவங்கள் கிடைப்பது ஒப்பீட்டளவில் சாதாரணம்தான் என்று குறிப்பிடும் அந்த ஆய்வு, பெரிய பாலூட்டிகளின் புதைபடிவங்கள் கிடைப்பதுதான் அரிது என்று குறிப்பிட்டுள்ளது.

“அந்த ஓநாய்க் குட்டி தான் வாழ்ந்த குகை இடிந்து விழுந்ததால் உடனடியாக இறந்திருக்கலாம் என்று கருதுகிறோம்,” என்று அந்த ஆய்வை தலைமை வகித்து நடத்திய பேராசிரியர் ஜூலி மச்சன் கூறுகிறார். இவர் டெஸ் மாய்ன்ஸ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் மற்றும் தொல்லுயிரியல் பேராசிரியர் ஆவார்.

அந்தக் குட்டி பட்டினி கிடக்கவில்லை, இறக்கும்போது அதன் வயது 7 வாரம் என்று தங்கள் தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *