உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் வெந்தயக்கீரை அல்வா, தயாரிப்பும் பயன்களும்!

உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்க செய்யும் வெந்தயக்கீரை அல்வா, தயாரிப்பும் பயன்களும்!
57 / Post Views.

வெந்தயம் போன்று வெந்தயக்கீரையும் பலன் தரக்கூடியது என்பதை பார்த்திருக்கிறோம். இந்த வெந்தயக்கீரையை கொண்டு உடலில் ரத்த உற்பத்தியை செய்ய என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

வெந்தயக்கீரை இரும்புச்சத்து நிறைந்த கீரை. வெந்தய விதைகளை கொண்டு பயிரிடப்படும் இக்கீரையை சாதாரணமாக வீட்டிலேயே வளர்க்கலாம்.வெந்தயக்கீரையில் கலோரி. வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து உள்ளது. உடல் அதிகப்படியான உஷ்ணத்தை கொண்டிருக்கும் போது உடலுக்கு சட்டென்று குளிர்ச்சி தருவதற்கு வெந்தய இலை உதவும்.

உடல் உஷ்ணம் அதிகரித்து வரக்கூடிய சீத பேதியின் போது வெந்தயக்கீரை சாப்பிடலாம். பொதுவாகவே வயிற்றுப்போக்கு இருக்கும் போது கீரைகள் தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதிக வயிற்றுப்போக்கான சீதபேதி பிரச்சனை இருக்கும் போது வெந்தயக்கீரையை சாப்பிட்டால் அது வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.

மாதவிடாய் காலத்தில் அடி வயிறு வலி உபாதை கொண்டிருக்கும் பெண்கள் வெந்தய விதைகளை பொடியாக்கி குடித்துவந்தால் வலி உணர்வு குறையுமென்பது தெரியும். அதே போன்று அந்த நாட்களை எதிர்கொள்வதற்கு முன்பு வெந்தயக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் வயிறு வலி உபாதை இருக்காது. அதோடு வெந்தயக்கீரை மாதவிடாய்க்கோளாறுகள், அதன் உபாதை போன்றவற்றை தணிக்க கூடும்.வயிற்று கோளாறுகளை தணிக்க கூடியவை.

கீரைகள் உடலுக்கு வலு கொடுக்க கூடியவை. வெந்தயக்கீரை உடலின் வலிமையை இழக்காமல் இருக்க உதவுவதோடு உடல் வலிமையை அதிகரிக்க செய்யும். குடல் புண்ணால் அவதிப்படுபவர்கள் சற்றே கசப்புத்தன்மை கொண்ட இந்த வெந்தயக்கீரையை இளசாக இருக்கும் போதே எடுத்துகொண்டால் குடல் நோயை குணப்படுத்தும். வாய்வு கோளாறு வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தீராமல் கொண்டிருப்பவர்கள் வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவந்தால் உப்புசம் நீங்கும்.

துர்நாற்றமுடைய மலம் கழிக்கும் போது வெந்தயக்கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலக்குடல் சுத்தமாகும். வயிற்றுப்புண், தொண்டைப்புண் இருக்கும் போது வெந்தய இலையை பொடியாக நறுக்கி வெண்ணெய் சேர்த்து சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால் ரணம் ஆறும். வெந்தயக்கீரை கண்களுக்கும், சருமத்துக்கும் என பலவிதமான நன்மைகளை செய்கிறது.

வெந்தயக்கீரையை குழம்பாக மசித்து, பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம். வெந்தயக்கீரை சப்பாத்தி வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒன்றும் கூட. இந்ஹ வெந்தயக்கீரையை கொண்டு தயாரிக்கப்படும் அல்வாவை எல்லோரும் சாப்பிடலாம். இது உடலில் வலு கொடுக்கும். ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும். தினசரி வெந்தயக்கீரையை சமைக்க முடியாதவர்கள் இந்த வெந்தய கீரையை கொண்டு அல்வா செய்து வைத்துகொண்டு தினமும் ஒரு உருண்டை வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் அதிகரிக்கும். குறிப்பாக ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த வெந்தய அல்வா மருந்தாக இருக்கும். எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவை

இளந்தளிராக இருக்கும் வெந்தயக்கீரை – 1 கப்
சம்பா கோதுமை ரவை சன்னமாக பொடித்தது – அரை கப்
(அரிசி ரவையும் சேர்க்கலாம்)
நாட்டுச்சர்க்கரை – ஒன்றரை கப்
சுவைக்கு ஏலத்தூள் சுக்குத்தூள் – சிட்டிகை அளவு
மண்சட்டியில் தயாரிக்க வேண்டும்.

வெந்தய இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். மண் சட்டியில் அரைகப் அளவு நீர் விட்டு நறுக்கிய வெந்தயக்கீரையை சேர்த்து மிதமானத்தீயில் வேகவிடவும். வெந்தயக்கீரை அடிபிடிக்காமல் இருக்க கைவிடாமல் கிளறவும். கீரை வேகும் போதே நன்றாக குழைந்து வேக செய்யும். சற்று நீர்ப்பதமாக இருக்கும் போதே ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். கீரையும் ரவையும் சேர்ந்து ஒன்றாக சேரும் போது அவை இறுக்கமாகும். அதற்கு முன்னதாக நாட்டுச்சர்க்கரை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

சர்க்கரை கரைய கரைய அனைத்தும் சேர்ந்து அல்வா பதத்துக்கு வரக்கூடும். இப்போது இறக்கி ஏலத்தூள், சுக்குத்தூள் கலந்து ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கவும். அப்படியே சேர்க்கலாம். அல்லது சிறு சிறு உருண்டையாக உருட்டி போட்டு வைக்கவும். (அரை நெல்லியளவு உருண்டை சரியான அளவு)

இதை தினமும் காலையிலும் மாலையிலும் தலா ஒரு உருண்டை சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய ரத்தம் அதிகரிக்கும். கீரையா என்று முகம் சுளிக்கும் குழந்தைகள் இந்த வெந்தய அல்வாவை விரும்பி சாப்பிடுவார்கள். பூப்படைந்த பெண் பிள்ளைகள், மாதவிடாய் கோளாறுகள் உள்ளவர்கள், கருப்பை பிரச்சனை கொண்டிருப்பவர்கள் என அனைவருக்கும் ஏற்ற சத்தான அல்வா இந்த வெந்தய கீரை அல்வா. புதுமையான இதை செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *