‘அடுத்த அதிர்ச்சியை கண்ணில் காட்டிய எகிப்து’… கலங்கி நிற்கும் `எவர் கிவன்’!

‘அடுத்த அதிர்ச்சியை கண்ணில் காட்டிய எகிப்து’… கலங்கி நிற்கும் `எவர் கிவன்’!
75 / Post Views.

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய `எவர் கிவன்’ கப்பலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது எகிப்து அரசு.

கொரோனாவால் உலகமே அதிர்ச்சியிலிருந்த நேரத்தில் கடந்த மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிய `எவர் கிவன்’ சரக்குக் கப்பல் விவகாரம் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் உலக பொருளாதாரமே ஆட்டம் காணும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவர் கிவன்’ என்ற சரக்கு கப்பல், கடந்த மாதம் 23-ம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாகச் சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.

ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர் வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழிப் பாதையாக உள்ளது. இதனால், சர்வதேச நாடுகளில் வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டது. அதன் பின் 6 நாட்கள் மனிதர்களின் இடைவிடாத முயற்சியும், இயற்கையின் கருணையும் எனத் தீவிர முயற்சிக்குப் பின் தரைதட்டி நின்ற கப்பல் மீண்டும் மிதக்கத்தொடங்கியது.

இதையடுத்து, சூயஸ் கால்வாயில் நீர்வழிப்போக்குவரத்து மீண்டும் சுமூக நிலைக்குத் திரும்பியது. ‘எவர் கிவன்’ கப்பல் சூயஸ் கால்வாயின் பாதுகாப்பான பகுதியில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சனை அத்துடன் முடிந்துவிடவில்லை. அதற்குப் பின்னர் தான் புதிய பிரச்சனைகள் எழுந்தது. கால்வாயை அடைத்து நின்றதால் ஏற்பட்ட இழப்பைக் கட்டினால்தான் `எவர் கிவன்’ கப்பலை வெளியே கொண்டு செல்ல முடியும் என அதன் உரிமையாளர்களுக்கு எகிப்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே கப்பல் தரை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழிப்போக்குவரத்து தடைப்பட்டதால் ஏற்பட்ட இழப்பு உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு ‘எவர் கிவன் கப்பல் உரிமையாளர் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழிக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கு எகிப்து நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இழப்பீடு வழங்கும் வரை ‘எவர் கிவன்’ சரக்கு கப்பலைப் பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எவர் கிவன் கப்பல் நிர்வாகத்திற்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இழப்பீடு தொகை தொடர்பாக எகிப்து அரசும், ‘எவர் கிவன்’ கப்பல் நிறுவன நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கிரேட் பிட்டர் லேக் என்ற அகலமான ஏரிப் பகுதியில் எவர் கிவன் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவும் சூயஸ் கால்வாயின் அங்கம்தான். இங்கிருந்து சர்வதேசக் கடல் பகுதியை அடைவதற்கு சூயஸ் கால்வாயில் இன்னும் 90 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்தாக வேண்டும். விசாரணை முடிந்து இழப்பீடு செலுத்தப்பட்ட பிறகுதான் கப்பலை விடுவிக்க முடியும் என்று சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒசாமா ராபி ஏற்கனவே  தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *