​மம்தா பானர்ஜியின் சொந்தக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில தலைவர் ராஜினாமா!

​மம்தா பானர்ஜியின் சொந்தக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அசாம் மாநில தலைவர் ராஜினாமா!

அசாமில் நடைபெற்ற குடிமக்களின் தேசிய கணக்கெடுப்பு  (NRC) குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, தவறான வகையில் பேசியதை கண்டிக்கும் விதமாக அக்கட்சியின் அசாம் மாநிலத் தலைவர் ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​‘உள்நாட்டுப்போர்’ பேச்சு:

வங்காளதேச நாட்டை ஒட்டியுள்ள அசாம் மாநிலத்தில் என்னற்ற வங்கதேசத்தினர் வசித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் வங்கதேசத்தினர் ஊடுருவியுள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜூலை 30ஆம் தேதி வரைவு பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டது. இதி; 40 லட்சம் பேர் பேர் வரை விடுபட்டிருந்தனர். இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட போது இந்த விவகாரம் தொடர்பாக பேசினார்.

வங்காளதேசத்துடன் இந்தியா கொண்டிருக்கும் நட்புறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படும் என்றும், அசாம் போன்று மேற்கு வங்கத்தில் இது போன்று கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு துணிவு உள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், அது போன்று நடந்தால் அது உள்நாட்டு போருக்கு வழிவகுக்கும் என்றும், ரத்தக்களரி நடைபெறும் என்றும் கூறினார்.

மம்தாவின் இப்பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் மீது அசாமின் திப்ரூகர் நகரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மம்தாவின் பேச்சை கண்டித்தனர்.

மாநிலத் தலைவர் ராஜினாமா:

மம்தா பானர்ஜியின் இப்பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரின் கட்சியைச் சேர்ந்த அசாம் மாநிலத் தலைவர் திவிபன் பதக் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திவிபன் பதக், குடிமக்களின் தேசிய கணக்கெடுப்பு  (NRC)  என்பது அசாமில் இருந்து வங்கதேசத்தினரை வெளியேற்றும் செயல் என்பது போன்று மம்தா பானர்ஜி சித்தரிக்க முயல்கிறார். அசாமில் பல ஆண்டுகளாக வங்கதேசத்தினரின் சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றும், மாநில நலனுக்கு எதிராக, செயல்படும் எதனையும் தான் அனுமதிக்க மாட்டேன் என்று பதக் கூறினார்.

மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய அவர், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸின் அரசியலுக்காக அசாம் மாநிலத்தை பலிகடா ஆக்குவதா என கேள்வி எழுப்பிய பதக், இப்படிப்பட்ட ஒரு தலைமையின் கட்சியில் உறுப்பினராக தொடர்வதை விரும்பவில்லை என்று கூறினார்.
 

தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக திரிணாமுல் கட்சியில் இருந்து 8 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அசாமுக்கு வரவிருப்பதாக மேற்குவங்க தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று தகவல் வந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக தன்னிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை, அப்படி ஆலோசனை கேட்டிருந்தால் இந்த நேரத்தில் இது தேவையற்ற ஒன்று என்று கூறியிருப்பேன் என்றும் தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டிருந்தபோது, அவரை இங்கு வருமாறு அழைப்பு விடுத்த போது ஏன் இங்கு வரவில்லை என்று கேள்வி எழுப்பிய பதக். பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவில் எம்.பிக்கள் உள்ள நிலையில் அசாம் வெள்ளம் குறித்து எளிதாக பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு செய்திருக்க முடியும். அப்போது உதவிக்கு வராத இவர்கள், தற்போது எதற்காக வருகிறார்கள் என்றார்.
 
மேலும் கள நிலவரம் அறியாமல் இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருவதால் மம்தா பானர்ஜியை கண்டிக்கும் விதமாக அசாம் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக  திவிபன் பதக் கூறினார்.

மம்தா பானர்ஜிக்கு எதிராக சொந்தக் கட்சியிலேயே மாநிலத் தலைவர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.