​பாலியல் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!

​பாலியல் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜினாமா!

பாலியல் புகாரில் சிக்கிய ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சால் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் கடந்த 2008ம் ஆண்டு சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்திலேயே வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்நிறுவனம், மிகப்பெரும் இ-காமர்ஸ் நிறுவனமாக உருவெடுத்தது.  
 
அண்மையில் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை, முன்னணி ஆன்லைன் நிறுவனமான வால்மார்ட் விலைக்கு வாங்கியது. அப்போதே சச்சின் பன்சால் விலகிய நிலையில், ஃப்ளிப்கார்ட் குழும தலைமை செயல் அதிகாரியாக பின்னி பன்சால் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தான், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர். 

பின்னி பன்சாலின் ராஜினாமாவுக்கு அவர் மீதான பாலியல் புகார் தான் காரணம் என ஒரு கருத்து நிலவுகிறது. 2016ம் ஆண்டு ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவர், பின்னி பன்சால் தமக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதம் இந்த புகார் வால்மார்ட் தலைமை நிர்வாகத்துக்கு அந்த பெண் தெரிவித்ததாகவும், அதன்பிறகே வால்மார்ட்டுக்கு இந்த விவகாரம் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் பின்னி பன்சால் குறித்து வால்மார்ட் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பாலியல் புகார் நிரூபிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட பெண் பின்னியுடன் இணக்கமான உறவில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னியின் ராஜினாமாவுக்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம் என பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. கடந்த சில மாதங்களகாவே வால்மார்ட் நிறுவனத்துக்கும், பின்னி பன்சாலுக்கும் கசப்பான அணுகுமுறை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் தாக்கமே ராஜினாமாவுக்கு காரணமாக இருக்கலாம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.