​வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்!

​வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது ஜிசாட் 29 செயற்கைக்கோள்!

ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஜிசாட் 29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்நுட்ப வசதி பெறும். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து சரியாக, மாலை 5.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

இதையடுத்து, சுமார் 17 நிமிடங்களில், ஜிசாட் 29 புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு தெரிவித்தார். இது இஸ்ரோவுக்கு மிக முக்கியமான வெற்றி என கூறிய சிவன், வரும் ஜனவரி மாதம் சந்திராயன் -2 விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த ஜிசாட் 29 செயற்கைக்கோளை தொடர்ந்து, மேலும் சில செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும் என்றும், இதில் அரசியல் ஏதுமில்லை என்றும், இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

ஜிசாட்-29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருப்பது, இரட்டை மகிழ்ச்சி என பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுவரை அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை, இந்திய ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தியிருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், நமது நாட்டின் கிராமப்புற பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவை கிடைக்கும் என்றும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.