குருபரனுக்கான தடையும் காணாமல் போனோருக்கான நீதியும் – சாளின் ஸ்டாலின்

குருபரனுக்கான  தடையும் காணாமல் போனோருக்கான நீதியும் – சாளின் ஸ்டாலின்
கலாநிதி குருபரனுக்கு விதிக்கப்பட்ட தடையின் பின்னணியில் காணாமல் போனோருக்கான நீதியும் மறுக்கப்படுகின்றது .

(படம் : சட்டத்தரணிகளை அச்சுறுத்தியவர்கள்) 

1996ஆம் ஆண்டு யூலை மாதம் 19ஆம் திகதி நாவற்குழி மறவன்புலவை சேர்ந்த 24 இளைஞர்கள் இராணுவ சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டு நாவற்குழி மில் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர்கள் காணாமலாக்கப்படுகின்றனர். அவர்களில் 3 இளைஞர்களின் பெற்றோர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை சட்டத்தரணிகளான கே.சுபாஜினி, கு.குருபரன், வி.திருக்குமரன் ஆகியோரூடாக தாக்கல் செய்தனர்.

குறித்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை துமிந்த கெப்பிட்டி வெலான என்ற இராணுவ அதிகாரி தலைமையில் வந்த இராணுவத்தினரே கைது செய்து சென்றதாக நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தனர். இதற்கான சான்றுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

 பாதிக்கப்பட்ட தரப்பு கைது செய்த இராணுவ அதிகாரியின் பெயர், அதற்கான ஆதாரங்கள் கண்கண்ட சாட்சிகள் அனைத்தையும் கொண்டிருந்தமையால் மனுதாரர்கள் பக்கம் வழக்கு வலுவான நிலையில் சென்றுகொண்டிருந்தது. இதன் அடிப்படையில் முதலாவது பிரதிவாதியான இராணுவ அதிகாரி  துமிந்த கெப்பிட்டிவலான, இரண்டாவது பிரதிவாதியான முன்னைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டும் அவர்கள் மன்றில் முன்னிலையாகவில்லை.

திரும்ப திரும்ப இந்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் பாதிக்கப்பட்ட தரப்புக்கு என்ன நிவாரணம் வேண்டும் என்றே கேட்டது. அதற்கு பெற்றோர்கள் மறுத்துவிட,  மரண சான்றிதழுக்கு விண்ணப்பித்தால் என்ன நடந்தது என்பதை கூற தயார் என்றும் கூறி பார்த்தது ஆனால் சட்டத்தரணி குருபரன் தரப்பு அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா – அவர்கள் எங்கு இருக்கிறார்கள், அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது?  என்ற உண்மையை வெளிப்பட்டுத்த வேண்டும் என்றே நின்றனர்.

வழக்கு பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கம் வலுவாக சென்றது. இதனால் சட்டமா அதிபர் திணைக்களமும் இராணுவமும் கையறு நிலையில் நின்றது. காணாமல் ஆக்கினார்கள் என்ற குற்றாச்சாட்டு முன்வைத்த இராணுவத்தினருக்கு சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் தங்கள் செலவில் (மக்கள் வரப்பணம்) சட்டத்தரிணிகளை நியமித்தது. பாதிக்கப்பட்ட தரப்பின் வழக்கை தள்ளுபடி செய்ய சட்டமா அதிபர் திணைக்களமும் இராணுவமும் கடுமையாய் உழைத்தது. குறித்த இளைஞர்களை கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளை யாழ்.மேல் நீதிமன்றம் விசாரணை செய்வதை தடுத்து நிறுத்த சட்டமா அதிபர் திணைக்களம் மனு ஒன்றை சமர்ப்பித்துமிருந்தது.

தொடர்ச்சியாக நல்லாட்சி அரசின் வழமையான பாணியில் மனுதாரர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது. குறித்த வழக்கில் ஆயராகியிருந்த சட்டத்தரணி சுபாஜினி தேவராஜின் உதவியாளர் 15 யூலை 2018 அன்று இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருந்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது அதனை பொலிஸ் ஏற்கமறுத்துவிட்டது. மனிதவுரிமை ஆணைக்குழு தலையிட்ட பின்னரே முறைப்பாட்டை ஏற்றார்கள்.

இதன் பின்னர் சட்டத்தரணி குருபரன் மற்று இந்த வழக்கில் ஆயரான சட்டத்தரணிகளை நீதிமன்றத்தின் முன்பாக வைத்தே புலனாய்வு பிரிவினர் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தனர். இது தொடர்பில் இரு தடவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் பயனேதுமில்லை.

இதன் தொடர்சியாக குருபரன் இலக்கு வைக்கப்பட்டார். பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பில் இருந்து வருகை தந்து கலாநிதி குருபரன் பற்றிய தகவல்களை சேகரித்து, விசாரணையும் செய்தனர். இப்போது இராணுவம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அழுத்தத்தை வழங்கி நீதிமன்றங்களில் ஆயராகுவதை தடுத்திருக்கின்றது.

இதே அரசு தான் காணாமல் போனோரை கண்டறிய காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவை நியமித்திருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்கை    இடையில் தடுத்து நிறுத்த எந்தளவு இடையூறுகளை தன் படைகள் ஊடாக வழங்குகின்றது. இப்போது காணாமல் போனோர் அலுவலகம் (OMP) குற்றவாளிகளை பாதுகாப்பதற்கா அல்லது காணாமல் போனோரை கண்டறியவா என்று நீங்களே முடிவெடுங்கள்.

சிங்கள அரசுகள் பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும் ஒரு புரிதலை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.