அரசியல்  எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா (Politiká) என்ற சொல்லிலிருந்து உருவானது.

வரையறை: “நகரங்களின் விவகாரங்கள்” என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும்.

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.

அரசறிவியல், அரசியற் கல்வி என்பது அரசியல் நடத்தை குறித்து கற்பதுடன், அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனைப் பயன்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு செய்கின்றது.

அரசியல் நூல்கள்

அரசியல் என்பது அதிகாரம் சார்ந்தது என்று கூறப்படுகிறது. அரசியல் அமைப்பு என்பது ஒரு சமூகத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் வழிமுறைகளை வரையறுக்கும் ஒரு கட்டமைப்பாகும். அரசியல் சிந்தனையின் வரலாறானது ஆரம்ப பழங்காலத்துக்கு முந்தையது. இதைப்பற்றி, ‘பிளேட்டோவின் (Plato) குடியரசு’, ‘அரிஸ்டாட்டிலின் (Aristotle) அரசியல்’ மற்றும் ‘கன்ஃபியூசியஸின் (Confucius) படைப்புகள்’, போன்ற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. இவை அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பல கோணங்களிலிருந்து பார்த்து எழுதப்பட்ட வரைவிலக்கண நூல்களாகும்.

அரசியல் வரலாறு

போர் வளர்ச்சிக் கலையின் அடிப்பட்டையில் மாநிலத்தின் தோற்றம் அறியப்படுகிறது. வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, தங்களின் இருப்பினை உறுதி செய்து கொள்ளவும், நவீன வகையிலான போர்முறைகளைக் கையாளவும், வெற்றிகரமான பாதையை அமைத்துக்கொள்ளவும் அனைத்து அரசியல் சமூகங்களும் கடமைப்பட்டிருக்கின்றன.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் முடியாட்சி நடைபெற்றது. அந்நாடுகளில் அரசர்களும், பேரரசர்களும் தெய்வீகத் தன்மை உடையவர்களாகக் கருதப்பட்டனர். அரசுரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட பிரஞ்சு புரட்சி “அரசர்களின் தெய்வீக உரிமை” எனும் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. கி.மு. 2100 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, கி.பி. 21 ஆம் நூற்றாண்டு வரை சுமேரியாவில் (Sumeria) முடியாட்சி நீண்ட காலம் நீடித்திருந்தது.

அரசர்கள் தம் அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள, ஆலோசகர்கள் மற்றும் உயர்ந்தோர் குழுவினர் அடங்கிய சபையின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர். இச்சபையின் தலையாய செயல்பாடுகள் மற்றும் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பணிகளில் சில:

  • அரசர்களின் பணப் பேழைகளையும், கருவூலத்தையும் எப்பொழுதும் நிரம்பிய நிலையிலேயே வைத்திருப்பது
  • திருப்திகரமான வகையில் இராணுவ சேவைப் பராமரிப்பு மேற்கொள்ளல்
  • அரசரால் பிரபுக்கள் மற்றும் நிலக்கிழார்கள் நிறுவப்படுதலை உறுதிப்படுத்துதல்
  • பிரபுக்களைக் கொண்டு வீரர்களைப் பராமரித்தல்
  • பிரபுக்களின் உதவியுடன் போருக்குத் தயார்ப்படுத்தும் பணி மேற்கொள்ளல்
  • அரசமைப்பு மூலம் வரிகள் சேகரித்தல் போன்றவை.

இந்த முடியாட்சி ஆலோசகர்களுடன், முடியாட்சி அமைப்பில் இல்லாத பிறர் முன்வைத்த அதிகாரத்திற்கான பேச்சுவார்த்தைகள், அரசியலமைப்புசார் முடியாட்சிகள் மேலெழும்பக் காரணமாயின. இதுவே அரசியலமைப்பு அடிப்படையிலான அரசாங்கம் துளிர்க்க அடிப்படைக் காரணமானது.