அணியிலக்கணத்தன்மை

தண்டியலங்காரம், மாறனலங்காரம், சந்திராலோகம், குவலயானந்தம் ஆகிய தனி அணியிலக்கண நூல்களுக்குப் பிறகு தோன்றிய இவ்வறுவகை இலக்கணம் அவற்றைப் போல அணிகளைப் பட்டியலிட்டுக் காட்டவில்லை அணிஎனல் புலவோன் அறிவள வாமே என்பது இவர் கொள்கை. இப்பகுதியில் உவமையணி ஒன்றே இடம் பெற்றுள்ளது. அதுவும் உவமானம். உவமேயம், பொதுப்பண்பு, உருபு ஆகிய மரபு வழியில் விளக்கப்படாமல் உவமான சங்கிரகங்களின் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இவருடைய அணியிலக்கணமும் ஒரு புதிய பார்வையே. சற்றேறக்குறையத் தொல்காப்பிய உவமையியல் போலவும் அமைந்துள்ளது எனக்கொள்ளவும் இடமுண்டு.

அறுவகை இலக்கணம் ஒரு முதல்நூல்

புலமை இலக்கணம் என ஒரு புத்திலக்கணத்தையே படைத்துக் கொள்ளல், எழுத்திலக்கணத்தில் வரிவடிவை நுழைத்தல், பொருள் இலக்கணத்தின் புதுமை ஆகிய பெருமாற்றங்களாலும் சொல், யாப்பு, அணி இலக்கணங்களிலும் புதுவழி கண்டுள்ளதாலும் இது பழைய நூல்களில் பயின்றுள்ள நூற்பாக்களையே மாற்றியமைத்தும் அல்லது அப்படியே எடுத்தாண்டும்

சிற்சில வேறுபாடுகளை மாத்திரம் பெற்று விளங்கும் ஒரு வழிநூலாகாமை தெளிவு. வேறு இலக்கண நூல்களிலிருந்து ஒரே ஒரு நூற்பாக்கூட எடுத்து இவரால் தம் நூலுள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பது கருதத்தக்கது. எனவே தான் பொதுப்பாயிரத்தில். இவ்விலக்கண நூல் முன்னோர் மொழியைப் பெருக்கிக் குறுக்கி மொழிவதன்றே எனத் துணிவாகக் கூற இயலுகிறது. இவ்வறுவகை இலக்கணம் இலக்கியம் படைக்க விழைபவர்களுக்கு ஏற்ற கருவியாக விளங்கவேண்டும் என்னும் கருத்திலேயே யாக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது நூலின் பல பகுதிகளால் விளங்குகிறது. இதனால் தான் போலும் சிறப்புப்பாயிரத்தில் இந் நூலாசிரியர் கவிராசர் செல்வம் ஆகும் நவநூல் என்கிறார். இந் நூல்கால இடையீட்டால் மொழியிலும் இலக்கணச் சிந்தனைகளிலும் நேர்ந்துள்ள மாற்றங்களைப் பதிவுசெய்து காட்டுகின்ற ஒரு பதிவேடு எனில் அமையும்.

நூலின் அறிமுகத்தை இத்துடன் முடித்துக்கொண்டு அடுத்து நூலாசிரியரைப் பற்றி இன்றியமையாத சிலவற்றைச் சிந்திப்போம்.

வண்ணச்சரபர் வரலாறு

இந்நூலாசிரியராகிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் காலம் இடம் பற்றி ஆய்ந்து கூறவேண்டிய அவசியமில்லை. தாமே தம் தன்வரலாறாகிய குருபரதத்துவ நூலில், ஆறினில் கேது; ஏழிடத்தினில் உடுபதி; எட்டில் வாதிடும் குரவர் இருவரும்; நவத்தில் மால்சனி எல்லவன் குளிகன்; தீதில்நாள் அத்தம்; திதிதச மியதாம்; தினம்திரம்; தேதிபன்னாறே, மாதமும் கரும்பாம்பு உறையுளும் தோன்றும் யான் வந்ததாம் மீன இலக்கினம்; வயங்கும் அங்கிசத்து லக்கினம் வில்; கலி நாலாயிரத் தொன்பான் நூற்றின் நாற்பத்தினொன்று ஆண்டே என விளக்கமாகக் கூறுகிறார். இக் காலக்குறிப்புகளிலிருந்து இவர் 22.11.1839 அன்று (விகாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் பதினாறாம் நாள் சனிக்கிழமை,)

பிற்பகல் 2.20 மணி வாக்கில் பிறந்தவர் என மிகத் துல்லியமாகக் கூறலாம்.

பிறந்த ஊர் திருநெல்வேலி, தந்தையார் செந்தில்நாயகம் பிள்ளை, தாயார் பெயர் பேச்சிமுத்தம்மை, பெற்றோர்களால் இவருக்குச் சூட்டப்பெற்ற இயற்பெயர் சங்கரலிங்கம் என்பதாகும். இவருக்குத் தமிழ்ப்புலமை கருவிலேயே திருவாய் வாய்த்தது. தன் ஒன்பதாம் அகவையிலேயே தென்காசியை அடுத்த சுரண்டை என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள பூமி காத்தாள் என்னும் அம்மனைப் பற்றி,

அமுதம் கடையும்நாள் ஆலம் வெடித்துத்

திமுதமெனத் தீயெரித்துச் சென்றது – அமுதமெனத்

தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக்

காத்ததனால் பூமிகாத் தாள்

என்னும் வெண்பாவை இயற்றினார். அன்றிலிருந்து இவர் நடுநாட்டின் திருவாமாத்தூரில் குருவருளில் கலந்த விளம்பி வருடம் ஆனி மாதம் இருபத்து மூன்றாம் நாள் செவ்வாய்க் கிழமை (5.7.1898) முடிய ஐம்பதாண்டுக் காலத்தில் நூறாயிரம் கவிதைகளுக்கு மேல் பொழிந்து தள்ளினார். தாம் இயற்றிய பாடல்களைத் தாமே நன்றாகச் செப்பம் செய்யப் பெற்ற ஓலைச்சுவடிகளில் அழகாக எழுதி வைத்துள்ளார். இறைவன் மீது கொண்ட ஊடலால் தாமே தன் படைப்புகளில் பாதியை அனலிலும் புனலிலும் இட்டு அழித்துவிட்டார் எஞ்சிய சுவடிகள் இன்று இச்சுவாமிகளின் உபதேச பரம்பரையைச் சேர்ந்த சிரவையாதீனத்தில் பேணிக் காக்கப்பட்டு வருகின்றன.

இயற்றிய நூல்கள்

இவரால் இயற்றப்பெற்ற நூல்களுள் புலவர் புராணம் அருணகிரிநாதர் புராணம் ஆகிய வாழ்க்கை வரலாற்றுக் காப்பியங்களும், குருபரதத்துவம் என்னும் தன்வரலாற்றுக் காப்பியமும், அறுவகை இலக்கணம், ஏழாம் இலக்கணம் வண்ணத்தியல்பு என்னும் மூன்று இலக்கண நூல்களும், முசு குந்த நாடகம் என்னும் இசைநாடகமும், முத்தமிழ்ப் பாமாலை என்னும் புதுமைப்படைப்பும், திருவாமாத்தூர்ப் புராணமாகிய தலபுராணமும், ஏழாயிரப் பிரபந்தம் என்னும் துதிப்பனுவலும் தமிழின் சிறப்புணர்த்தும் தமிழ் அலங்காரம் என்னும் சிற்றிலக்கியமும் நானிலைச் சதகம், கௌமார முறைமை, கௌமாரலகரி, கௌமார வினோதம், கௌமார தீபம், தியானாநுபூதி ஞானவந்தாதி, சதகஉந்தி, பிரணவா நூபதி முதலிய சாத்திர நூல்களும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன ஆகும். இவரால் இயற்றப்பெற்ற பிள்ளைத்தமிழ்கள் ஐந்து: கலம்பகங்கள் ஆறு; அந்தாதி வகைகள் பலப்பல; உலாவும் கோவையும் ஒவ்வொன்று.

இவரால் இயற்றப்பெற்ற திருச்செந்தூர்க் கோவை பிற ஐந்திணைக் கோவைகளைப் போலத் துறைவகையாகத் தொகுக்கப்படாமல், தொல்காப்பியநெறி பற்றிக் கையாகத்தொகுக்கப்பட்டுள்ளது என்பதும் இதில் செந்தில்நாதனே கிளவித் தலைவனாகவும் உள்ளான் என்பதும் சிறப்பாகக் கருதப்படவேண்டிய செய்தியாகும். இப் பதிப்பாசிரியனின் அறிவுக் கெட்டியவரை இவ்வாறு அமைந்த ஐந்திணைக் கோவைநூல் இது ஒன்றுதான்.

இவர் மொத்தம் பனிரெண்டு வண்ணங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளையும், எண்ணற்ற திருப்புகழ்ப் பாக்களையும் இயற்றியுள்ளார். சந்த இலக்கியத்தில் இவர் அருணகிரிநாதருக்கு இணையானவராகவே விளங்குகிறார்.
இவருடைய நூல்களில் ஏறக்குறைய பாதிதான் பதிப்பாகியுள்ளன. எனினும் அவை பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களில், பல்வேறு வடிவங்களில் பதிப்பான்மையின் ஒரே சீராக இல்லை. அதனால் இப்போது கிடைக்கின்ற ஐம்பதினாயிரம் பாடல்களையும், ஒரே சீரான பதிப்புகளாகச் சுமார் 40தொகுதிகளில் வெளியிடும் அரிய பணிக்குச் சிரவையாதீனம் திட்டமிட்டு ஆவன செய்துவருகிறது.

தமிழ் இலக்கண வளர்ச்சி

தமிழின் இலக்கணம் மிகத் தொன்மையான ஒன்றாகும் தமிழில் இலக்கணம் என்றால் மொழி அமைப்பை மட்டும் கூறுதல் ஆகாது. மொழியோடு நூல்களின் வடிவம், நுதல் பொருள், மக்கள் வாழ்வு ஆகிய அனைத்துமே இலக்கணத்தில் ஆராயப்படும். தமிழ் மொழியில் இலக்கணம் என்பது மொழியை மாத்திரம் ஆராய்வதாக அன்றி அம்மொழியினாலான இலக்கியம், அவ்விலக்கியத்தின் பொருள், வடிவம் ஆகியனவற்றை யெல்லாம் ஆராயும் ஒரு நெறியாக அமைந்த(து) என்னும் அ.சண்முகதாஸ் அவர்களின் கருத்து ஓர் அடிப்படை உண்மையாகும். எனவேதான் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழ் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இயல்களாக ஆராயப்பட்டது.

தொல்காப்பியச் செய்யுளியலுக்கு இணையாகக் காக்கை பாடினியாரின் யாப்புமரபு ஒன்றும் பண்டைக் காலத்தில் வழக்கில் இருந்திருக்கவேண்டும். இந்த யாப்புநெறி நாளடைவில் மிகச் சிறப்பாக வளர்ந்து பாக்கள் இனங்களோடு பல்கிப் பொலிவடைந்த காலத்தில் யாப்பிலக்கணம் தனியே விரிவடைந்து தமிழ் இலக்கணம் நான்கு கூறுகளை உடையதாயிற்று. இந்த நான்கும் பெரும்பாலும் தமிழிற்கே உரிய இலக்கணத்தை ஆராய்தலாம். வீரசோழியத்தின் வடமொழி வழிப்பட்ட யாப்பியல், இலக்கியம் கண்டு இயம்பப்பெற்ற இலக்கணச் செந்நெறியன்மையின் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டுவதின்று.

அகப்புறத்துறைச் செய்திகளைச் சிறுசிறு வரலாற்றுத் துணுக்குகளோடு சேர்த்துப்பாடும் சங்கத் தனிப்பாடல்கள் கீழ்க்கணக்கு நூல்களாகவும் காப்பியங்களாகவும் மலர்ந்தன. சமய உண்மைகளும் நீண்ட கதைகளும் பாடுபொருளாயின.
இதனால் படைப்பாளிக்கு அதிக சுதந்திரம் கிடைத்தது. இலக்கியத்தில் புதிய உத்திகள் தோன்றின. தொல்காப்பிய உவமவியலுக்குள் இவை அடங்கவில்லை. எனவே இவற்றை ஆராயத் தனியாக ஓர் இயல் தேவைப்பட்டது. அப்போது ஏற்பட்ட வடமொழியின் கூட்டுறவும் துணைக்காரணமாகத் தண்டியலங்காரம் பிறந்தது. தமிழில் அணியிலக்கணம் என்னும் ஐந்தாவது அதிகாரம் முகிழ்த்தது. இப்பிரிவை அனைத்து மொழிகளுக்கும் பொதுவான ஒன்று எனக் கொள்வதில் தவறில்லை.

தமக்கெனக் கட்டுக்கோப்பான வடிவமைப்பைப் பெற்ற சிற்றிலக்கிய வகைகள் தமிழில் தோன்றியபோது பாட்டியல் நூல்கள் பிறப்பெடுத்தன. பாட்டியல் நூல்களிலும் இலக்கியம் கண்டு இலக்கணம் வகுக்காமல் சில கற்பனைகள் கலந்துவிட்டதென்பது உண்மையே, எனினும் பாட்டியலில் வடமொழிச் செல்வாக்குக் குறைவே. ஆனால், கோதுமையை இறக்குமதி செய்யும்போது பார்த்தீனியக் களையும் சேர்ந்து இறங்கி விடுவதைப் போலத் தேவையற்ற பொருத்தவியல் என்னும் ஒன்று அணியியலோடு சேர்ந்துவந்து பாட்டியலில் ஒட்டிக் கொண்டது. பாட்டியலும் பொருத்தவியலும் யாப்பிலக்கணத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றன. இதுவே மூன்றிலக்கணம் ஐந்திலக்கணமாக விரிந்த வளர்ச்சியின் வகை.

புலமை இலக்கணம் ஏன்?

மிகப் பிற்பட்ட காலத்தில் தமிழக வரலாற்றில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. தமிழ்ப் பண்பாட்டையும், கலைகளையும் போற்றிப் பாதுகாத்து வந்த தமிழ் மன்னர்களின் ஆட்சி மறைந்தது. வடமொழி மட்டுமன்று; இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியேயிருந்து வந்த பல மொழிகளும் தமிழை ஒவ்வொரு வகையில் பாதித்தன. சான்றோனாதலும் இறைவன் திருவடியை யடைதலுமே கல்விப்பயன் என்னும் நிலைமாறிக் கல்வியும் ஒரு தொழிலாகிவிட்டது. வயிற்றின் கொடுமையால் நாழி அரிசிக்கே பாட்டிசைத்துப் போய்விற்கும் அவல நிலையைப் பல புலவர்களின் வரலாற்றில் காணலாம். சில சமயங்களில் தமிழ் படித்தவன் தடமுலை வேசையராக

பிறக்காமல் தையலர்பால் சந்து நடக்கக் கற்காமல் சனியான தமிழ் படித்துத் தொலைத்தோமே என ஏங்கியதும் உண்டு.
சமுதாயத்தில் தமிழறிந்து போற்றும் தலைமையில்லை; தரமான தமிழ்க் கல்விக்குத் தக்க மதிப்பில்லை. அப்போதும் சில சமயநிறுவனங்கள் சிறந்த தமிழ்ப்பணி யாற்றிவந்தன. ஆனால், பொதுவாக இலக்கியங்கள் என்னும் நினைவாலன்றிச் சமயச் சார்புடையனவாகவே பெரும்பாலும் அவை செயற்பட்டன. இது இயல்பானதே.

எனவேதான் தமிழ்ப்புலவன் அரசன், சிற்றரசன், பெரு நிலக்கிழார் என விளங்கிய செல்வர்களை அண்டி வாழவேண்டியவன் ஆனான். பெரும்பாலும் அவர்கள் எளியோரை வாட்டி, வலியோரை வாழ்த்தி, அதிகாரத்திற்கு அடிவருடி, விளம்பரத்திற்கு அறம்புரிந்து, பகட்டாக வாழ்பவர்களாகவும், தன்னை எப்போதும் நான்குபேர் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என ஆசைப்படுபவர்களாகவும் இருந்தனர். இவர்களைச் சார்ந்திருந்த புலமைக் கும்பலும் இத்தகையோரை எவ்வளவு உயர்த்திப் புகழமுடியுமோ அவ்வளவும் புகழ்ந்து பாடித்தீர்த்தது. உண்மைக்கும்இவர்கள் கூற்றுக்கும் சற்றும் தொடர்பே இருக்கவில்லை. அகப்பொருளின் பொய் பாராட்டல் என்னும் துறை இவர்களுக்கே மெய்யாகப் பொருந்தும். இது மட்டுமன்று. சமுதாயப் பொறுப்புணர்ச்சியோ கடமையோ இல்லாததால் இச்செல்வர்களில் பெரும்பாலோர் இன்பத் துறையில் மிக எளியராக இருந்தனர். இவர்களைப் பற்றிய இலக்கியமும் காமக் களஞ்சியமாக இருந்ததில் வியப்பேது?

இதனால்தான் இத்தகையவர்களைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பாடிய புலவர்களைத் தரமிக்க பல சான்றோர் இகழ்ந்தனர். அவர்கள் இகழ்ந்ததற்குக் காரணம் மனிதனைப் பாடினர் என்பது அல்ல; பொய்யையும் இழிவையும் பாடினர் என்பதேயாகும். மனிதர்களைப் புகழ்ந்த சங்கப் புலவர்கள் எப்போதும் மதிக்கப்படுகின்றனர். மனிதர்களையே ஆசானாகவோ அடியாராகவோ போற்றிய சமயப் புலவர்களும் பெருமையாகப் பேசப்படுகின்றனர். ஆனால் ஊதியம்
கருதி உயர்வற்றவர்களை வானளாவப் புகழ்ந்தும், வரம்பு மீறிய காமச்சுவை நாறவும் பாடிப் பிழைப்பை நடத்திவந்த புலவர்களே பழிக்கப்பட்டனர். தமிழ்ப்புலவனின் மதிப்பு சமூகத்தில் குறைந்துவிட்டது,
ஒரு புலவன் மற்றொரு புலவனைக் கண்டால் இவன் எங்கே நமக்குப் போட்டியாக வந்துவிடுவானோ என அஞ்சினான். இவ்வச்சம் பகையாக உருக்கொண்டது. இப்போட்டி, அறிவுசார்ந்த புலமைப்போட்டியாக இல்லாமல் வயிற்றுப் பாட்டுப் பிரச்சினையாக இருந்ததால் பகைமை உணர்ச்சி ஆழங்காற்பட்டது. ஓர் அறிஞன் மற்றொருவனின் அறிவாற்றலை மதிக்காமல் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவனை மட்டம்தட்டவே முனைந்தான். இது புலமைக் காய்ச்சல் எனவும் பெருமையாகக் கூறப்பட்டது. எப்படியோ ஒரு பணக்காரனின் அல்லது சில செல்வர்களின் தயவைச் சம்பாதித்து வாழும் ஒருசாரார் – தொழில்முறைக் கவிஞர் எனப் பெருமையாகச் சொல்வோமே – புலவர்களாகத் திரிந்தனர்.

இன்னொரு சாரார் வாழ்க்கைப் பிரச்சினைகள் இல்லாமலோ அல்லது அவற்றைப்பற்றிக் கவலைப்படாமலோ அமைதியாகத் தத்துவ ஆராய்ச்சியிலும் தோத்திரங்களிலும் இலக்கணக் கடாவிடைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களால் சமுதாயத்திற்குத் தீமைகள் ஏதுமில்லை எனினும் சாமானிய மானவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இவர்களால் உடனடிப் பயன்களும் இருக்கவில்லை. இத்தகைய அறிஞர்கள் ஓரளவு சமுதாயத்தை விட்டு விலகியே நின்றனர் எனலாம்.

அந்நாளைய தமிழ்ப்புலவர்களிலே விசித்திரமான ஒரு மூன்றாம் பிரிவினரும் இருந்தனர். இவர்களைப் புலவர் இளங்குமரன் அவர்கள் வடமொழியும் தமிழும் தனித்தனி மொழிகள் அல்ல, ஒருமொழி என்னும் மயக்க உணர்வுடன், வடமொழியே தமிழ்மொழி மூலம் என்னும் மாறுபட்ட உணர்வும் கொண்டவர்கள் என்பார்.

இவ்வாறு முச்சந்தியிலே உழன்று கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களுக்குத் தமிழ்மொழியின் தொன்மை, புனிதத் தன்மை தனித்தியங்கும் ஆற்றல் ஆகியவற்றை எடுத்துக்காட்டி, புலவர்களுக்குள் இணக்கம் ஏற்பட வேண்டும் என அறிவுறுத்தி ஒரு நல்லவையில் கூறமுடியாதபடி ஆபாசமாகக் கொட்டுதல் தரமன்று எனத் தெளிவுறுத்தித் தமிழ்ப்புலவர்களைச் சமுதாயத்திற்குப் பயன்படுமாறு மடைமாற்றம் செய்தாக வேண்டிய வரலாற்று இன்றியமையாமை ஏற்பட்டுவிட்டது. காலத்தின் இக் கட்டாயம்தான் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் புலமை இலக்கணம்.

புலமைஇலக்கணம் புகல்வது என்ன?

தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனின்

வெகுளியற்று இருப்போன் வெறும்புல வோனே.

தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதுஎனில்

அஃதுஉணர் அலகையில் தாழ்வுஎனல் அறமே.

அருமை யறியான் அவையிடைப் புகுந்து

பெருமைபா ராட்டலும் ஏனையும் பிழையே.

காகப் புள்என இனத்தொடு கலவாது

ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே.

காமக் கடலே கதிஎனக் கருதிப்

போவார் புலமையில் புண்ணியம் இன்றே.

கால வேற்றுமை கருதாப் புலவன்

சீலனே எனினும் சிறுமை யினனே

தமிழ்க்கும் தனக்கும் சார்தரு நெறிக்கும்

தன்இனத் தினர்க்கும் தவறுஉறா வண்ணம்

முயல்வோன் புலமை முதன்மைத் தாமே.

புலமைஇலக்கணத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஏழு நூற்பாக்களை ஓரளவு இவ்வியலின் சாரம் எனலாம்.
இந் நூலாசிரியருக்கு 43 ஆண்டுகள் இளையவராகிய மகாகவி பாரதியாரும் தம் சின்னச்சங்கரன் கதையில் அன்றைய புலவர்களின் நிலையையும், வேறு பல இடங்களில் புலவர்கள் ஒழுக வேண்டியவற்றையும் தௌ¤வாகக் கூறுகிறார். இவ்விருவரும் ஒரே கருத்தை வேறுவேறு கோணங்களில் தருகின்றனர். சுவாமிகளிடம் சமய உணர்வும் பாரதியாரிடம் சமுதாய உணர்வும் விஞ்சி நின்றதே இவ்வேறுபாட்டிற்குக் காரணம். இவையே புலமை இலக்கணம் தோன்றிய சூழலும், நுதலும் பொருளும் ஆம், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த வந்தது குறிஞ்சிப் பாட்டு; தமிழனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுந்தது புலமைஇலக்கணம். இதனை மொழியின்வளர்ச்சி எனலாமா என்பது சிந்தனைக்குரியது.

இந்நூல் அதிகம் பரவாத காரணம்

பழைய மரபிலேயே காலூன்றி இப்புலமை இலக்ணத்தைப் படைத்தும், தம் சாத்திர தோத்திர நூல்களில் பலவாறு கூறியும் சுவாமிகள் தம் கருத்தைப் பரப்ப முயன்றார். ஆனால் அவர் அதில் மிகப் பெருமளவு வெற்றியடைய இயலவில்லை. இவ்வியலாமை சுவாமிகளின் குறையன்று. பாரதியாருக்கு வாய்த்த நாட்டு விடுதலை இயக்கம் போன்ற ஓர் உணர்ச்சி மிக்க சார்பு சுவாமிகளுக்கு அமையவில்லை. சுவாமிகளுடைய கருத்துகளை அறிவுபூர்வமாக அணுகி, அவற்றைச் சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் ஓர் இயக்கமும் அமையவில்லை. சுவாமிகளின் அரிய சிந்தனைகள் ஆய்விற்கும் பயன்பாட்டிற்கும் உரியவையாக அல்லாமல் பொருளுணர்ச்சியற்ற வெறும் பாராயணச் சடங்கிற்குரியனவாய்க் கருதப்பட்டு, அதிகம் பரவாமல் போனமை தமிழினத்தின் தவக் குறையேபோலும். ஆனால் இப்போது சிரவைக் கவுமார மடாலயமும், பேரூர் சாந்தலிங்கஅடிகளார் திருமடமும் சுவாமிகளுடைய நூல்களைச் சமயஇலக்கியமாக மட்டுமன்றிச் சமுதாய நோக்கிலும் ஆராய்ந்து வெளிப்படுத்தும் அரிய பணியில் ஈடுபட்டுள்ளன.

எழுத்தின் வரிவடிவம் காட்டுதல்

இவ்வாறு காலத்தின் கட்டாயத்தால் இன்றியமையாததாகிவிட்ட புலமையிலக்கணத்தோடு விரிந்த அறுவகை இலக்கணம்
மற்றொரு வகையிலும் சிறப்புடையதாகத் திகழ்கிறது. அனைத்துத் தமிழ் எழுத்துகளின் வரிவடிவையும் இந்நூல் நன்கு விளக்குகிறது.எழுத்துகளின் வரிவடிவை உணராதவர் ஒரு நூலையும் படிக்க இயலாது. எனவே எழுத்தானியன்ற நூலில் எழுத்துகளின் வரிவடிவைக் கூறுவதால் பயனேதுமில்லை எனச் சிலர் கொன்னே மேம்போக்காகக் கருதலாம். நூலாசிரியரும் இதனை அறியாதார் அல்லர். அதனால்தான்,

உருவும் ஓசையும் உணராற்கு ஒருநூற்
பயனும் எய்தாப் பண்புநன் குணர்ந்தும்
தொடங்கிய துறைக்காச் சொல்முறை முன்பின்
பிறழா வண்ணம் பேசுதும் பிரித்தே

என முதலில் தெளிவாக்கிவிட்டு எழுத்தின் வரிவடிவத்தை விளக்கத் தொடங்குகிறார்.இச்செயல் புதுமையாகத் திகழ்வதுடன், எழுத்துவடிவக் காப்பாக என்றும் போற்றிக்கொள்ள வாய்ப்பதுமாம் எனப் பாராட்டும் அறிஞர் இளங்குமரன் அவர்கள், இம்முயற்சியில் தொல்காப்பியர் ஊன்றியிருப்பின் வடிவம், அதன் மாற்றம் பற்றிப் பலப்பலரும் பலப்பல பேசும் ஒருநிலை தோன்றியிருக்கவே முடியாதுபோயிருக்கும் என்பது தெளிவாம் என உணர்ச்சியோடு அங்கலாய்க்கிறார்.

ஆனால் ஒருவகையில் இதுவும் இன்றியமையாமையின் விளைவே எனலாம். பண்டைக் காலத்தில் நேராக எழுதுபவர்களும் படிப்பவர்களும் குறைவு. அக்காலத்தில் படித்தவர்களுக்குக் கூடச் சுவடி எழுதித் தருவதற்கென்றே வேறு சிலர் இருந்தனர் என்பதைச் சுவடியியலார் அறிவர். இப்போது கிடைக்கக் கூடிய சுவடிகளில் தொன்மையானவை என மதிக்கப்பெறும் 17-ஆம் நூற்றாண்டுச் சுவடிகளையே சிலர் எழுதப் பலர் படித்தனர் என்றால் தொல்காப்பியர் காலநிலை எப்படி இருந்திருக்கும்? அறிஞர் திரு. அ. சண்முகதாஸ் அவர்களின் கணிப்பு, எமது பழைய தமிழ் இலக்கணகாரர் எழுத்துக்களின் பௌதிக வடிவம் பற்றி அவ்வளவு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. சாசன வழக்குகளுக்கு முக்கிய இடம் வழங்கிய வீரசோழிய இலக்கணகாரரே சாசனங்களில் நூற்றாண்டுகள் தோறும் மாற்றமடைந்து வந்த தமிழ் வரிவடிவங்கள் பற்றிக் குறிப்பிட்டாரில்லை. தமிழ் இலக்கணகாரர் வரிவடிவம் பற்றி விளக்கம் கொடுக்காததற்கு ஒரு காரணம் உண்டு. அஃதாவது அந்நாட்களிலே வாசிப்பவர்கள் குறைவாகவே இருந்தனர். கூறுதல் மொழிதல் என்பனவே எமது மரபாக இருந்ததென்பதற்கு எம் பண்டைய இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. ஆனால் வீரமாமுனிவருடைய காலத்திலோ அச்சுயந்திரம் தமிழ்நாட்டிலே செல்வாக்குப்பெற்ற காரணத்தால் வாசிப்பவர்களுடைய தொகை தமிழ் நாட்டிலே அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணத்தினால் எழுத்துக்களின் வரிவடிவம் பற்றிய சிந்தனை அவசியமாயிற்று. வீரமாமுனிவர் இக்கால கட்டத்திலேயே தமிழ் எழுத்துக்களின் வடிவமாற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றினார் என்பதாகும்.

தமிழ் எழுத்துகள் அனைத்திற்கும் தம் காலத்தில் வழங்கிய வரிவடிவத்தைத் தௌ¤வாகக் காட்டிய சுவாமிகள் அன்று ஆங்காங்கு வழக்கிலிருந்த ஒரு சில வரிவடிவங்களையும் எடுத்துக்காட்டி அவை தவறானவை என்கிறார். வீரமா முனிவரால் செய்யப்பெற்றதாகக் கருதப்படும் எழுத்துச் சீர்திருத்தத்தை 48, 49-ஆம் நூற்பாக்களில் ஏற்றுக் கொள்கிறார். 49-ஆவது நூற்பா ஒரு பாராட்டாகவே அமைந்துள்ளது.அரைமாத்திரை ஒலிக்கும் மெய்யெழுத்தைக்காட்டுவதற்காக இடப்படும் தலைப்புள்ளியை எகர ஒகரமாகிய-ஒருமாத்திரை உடைய-உயிர் எழுத்துகளுக்கு இடுதல் சற்றும் பொருத்தமற்ற குறியீடு என்பது இவர் வாதம். ஆனால் தமிழ் அச்சுநூல்களிலேயே தலைப்புள்ளி பெற்ற எகர ஒகரங்களைப் பார்க்கலாம்.

காட்டு சென்னைக் கல்விச்சங்கத்திற்காக திரு. தாண்டவராய முதலியார் அவர்களால் 1839-இல் பதிப்பிக்கப்பெற்ற சேந்தன் திவாகரம். இப் பொருத்தமற்ற குறியீட்டை மாற்றியமைத்ததையே 49-ஆம் நூற்பா சிறப்பாகப் பாராட்டுகிறது.
அகர முதல் னௌகார இறுதியான எழுத்துகளுக்கேயன்றிக் கணக்கில் பயன்படும் அலகெழுத்துகள், எழுத்துச் சுருக்கத்தின் பொருட்டு ஆளப்படும் கூட்டெழுத்துகள், குறிப்பெழுத்துகள் ஆகியவற்றின் வரிவடிவங்களையும் இந்நூலின் எழுத்திலக்கணம் எடுத்துக்காட்டுகிறது. இதுவும் இவ் வறுவகை இலக்கணத்திற்கே சிறப்பாக உரியதாகும்.

பொருள்இலக்கணப் புதுமை

ஐந்திலக்கணங்களைத் தனித்தனியே கூறும் முதல்நூலாகிய வீரசோழியமே பொருள் இலக்கணத்தில் அகம், புறம் என்னும் பண்டைய நிலையைவிட்டு விலகிவிட்டது. அடுத்த பெருநூலாம் இலக்கணவிளக்கமும் தொல்காப்பியவழியையே பின்பற்றினாலும் புறத்திணையை மிகவும் சுருக்கிவிட்டது. தமிழில் அகப்பொருள் இலக்கணம் மலர்ந்த அளவு இலக்கிய ரீதியாகவோ இலக்கண வகையிலோ புறத்திணை வளம் பெறவில்லை என்பதுண்மை. இதன் காரணத்தை ஆராய்தல் ஈண்டு வேண்டற்பாலதன்று.

இலக்கண விளக்கத்தைத் தொடர்ந்து தோன்றிய தொன்னூல் விளக்கம் அகப்பொருள், புறப்பொருள் என்பதற்கு முற்றிலும் புதுவகையாக விளக்கம் தருகிறது. அகப்பொருளுக்குரிய மரபு வழிப்பட்ட உரிப்பொருளையே சுட்டாத இந்நூலில் ஒரு நூற்பாவின் பகுதியாகிய ஆறு அடிகளில் புறத்திணை ஏழும் கூறி முடிக்கப்பட்டு விடுகின்றன. இந்நூலையடுத்து வந்த முத்துவீரியத்திலோ பொருளதிகாரத்தின் அகவொழுக்க இயலில் எட்டு நூற்பாக்களில் புறத்திணைகளின் அறிமுகம் மட்டுமே காணக் கிடக்கிறது.

இவ்வாறு பல்வேறு கருத்துகளுக்கிடமாயமைந்த பொருளதிகாரம் இவரால் அகம், புறம், அகப்புறம் என மூன்றாகப்பகுக்கப்படுகிறது. அகப்பொருளில் குறிப்பிடத்தக்க அளவு பெரிய மாற்றங்கள் இல்லை என ஒருவாறு கொள்ளலாம். ஆனால் எல்லோரும் அகப்பொருளில் கொள்ளும் குறிஞ்சி முதலிய ஐவகை நிலப்பாகு பாட்டை இவர் புறப்பொருளில் வேண்டுவர்: இவர் காட்டும் புறப்பொருள் முற்றிலும் வேறானது. இவரே மற்றோரிடத்தில். அகப்பொருள் காமம்; புறப் பொருள் சமர் என்று அறைந்துள்ளார்; யாமும் அறுவகை இலக்கணத்து ஒருவா சொற்றுளம்; உணர்வது கடனே என்கிறார். அகப்புறம் என்பது ஓரளவு தத்துவக் கொள்கைகளாக உள்ளன.